ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Bella Dalima 18-06-2018 | 8:04 PM
Colombo (News 1st)  நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக எதிர்வரும் 30ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டது. இலங்கை நீதிமன்றங்களின் அநேகமான நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் ஊழல்வாதிகள் என ஊடகங்களுக்கு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்தினால், நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ள அவதூறுக்கு ஏன் தண்டனை வழங்கக்கூடாது என்பதை விளக்கும் சட்டமூலமொன்றை முன்வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பிரதம நீதியசர் பிரியசாத் டெப் மற்றும் நீதியரசர் மூர்து பெர்னாண்டோ ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். மனுதாரர்கள் உரிய நடைமுறையை பின்பற்றத் தவறியுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கமையவே சட்ட மா அதிபர் மனுவில் தலையீடு செய்துள்ளதாக, சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான சுட்டிக்காட்டியுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தினை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் இந்தக் கூற்றினால் நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்பட்டுள்ளதாக தீர்மானித்துள்ளதால், அவருக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, உத்தரவைப் பெறுவதற்காகவே, இன்றைய தினம் வழக்கு நடைபெற்றதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.