குற்றச்சாட்டை நிராகரித்தார் தினேஷ் சந்திமால்

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை தினேஷ் சந்திமால் நிராகரிப்பு

by Staff Writer 18-06-2018 | 4:23 PM
பந்தை சேதப்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை​ இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் நிராகரித்துள்ளார். எவ்வாறாயினும், பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்ததன் பின்னர் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்க விதிக்கோவையின் இரண்டாம் சரத்தில் 2, 9 பிரிவை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி நடுவர் ஜவகல் ஶ்ரீநாத்தின் (Javagal Srinath) தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர் அலீம் டார் மற்றும் மூன்றாம் நடுவர் ரிச்சட் கெட்டில்போராவ் ஆகியோர் சந்திமால் மீது குற்றஞ்சுமத்தியுள்ளனர். இனிப்புப் பண்டம் ஒன்றை சந்திமால் தனது வலது பக்க காற்சட்டைப் பையில் கொண்டு வந்ததாகவும் அதனை உண்ட பின்னர், போட்டிக்கு பயன்படுத்திய பந்தினை சேதப்படுத்திய காணொளிகள் சர்வதேச கிரிக்கெட் பேரவை வசமுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் இதற்காக இலங்கை கிரிக்கட் சபையின் நிர்வாகத்தினரையும் இணைத்துக்கொள்வதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.