பந்தின் தன்மையை மாற்றிய சம்பவம் தொடர்பில் விசாரணை

பந்தின் தன்மையை மாற்றிய சம்பவம் தொடர்பில் நாளை விசாரணை: சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு

by Bella Dalima 18-06-2018 | 8:58 PM
Colombo (News 1st)  இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தின் தன்மையை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாளை (19) விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் பந்தை பிரகாசிக்கச் செய்யும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் போட்டியின் நேற்றைய மூன்றாம் நாளில் பந்தின் தன்மை தொடர்பில் சிக்கல் நிலை உருவானது. பந்தில் ஒட்டும் தன்மை கொண்ட திரவமொன்று காணப்படுவதாக நடுவர்கள் தெரிவித்தனர். இதன்போது, துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான ரொஷேன் சில்வாவின் துடுப்பாட்ட மட்டை பரிசோதிக்கப்பட்டதோடு மட்டையை மாற்றுமாறும் நடுவர்கள் கூறினர். இதனையடுத்து ரொஷேன் சில்வா புதிய மட்டையொன்றில் துடுப்பெடுத்தாடினார். மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய 4ஆம் நாளில் இலங்கை அணி 02 விக்கெட்கள் கைவசமிருக்க, 287 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.