அரசின் காய் நகர்த்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்

சிறுபான்மை இனங்களுக்குள் மோதலை ஏற்படுத்தும் அரசின் காய் நகர்த்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்: சி.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தல்

by Bella Dalima 18-06-2018 | 8:42 PM
Colombo (News 1st)  வட மாகாணத்திற்கான சிறுவர் பாதுகாப்பு தேசிய செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர் - அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, பிள்ளைகளின் பாதுகாப்பிற்கான பிரதான இடமாக வீடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியறுத்தினார். பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் மீதான சித்திரவதைகள், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், மக்களின் காணிகளை இராணுவத்தினர் தொடர்ந்தும் வைத்திருக்க நியாயமான காரணங்கள் எவையும் இல்லை என குறிப்பிட்டார். மேலும், வடக்கு - கிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாக தம்மைத்தாமே ஆளுகின்ற இனமாக வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் சி.வி.விக்னேஷ்வரன் கோரிக்கை முன்வைத்தார். சிறுபான்மை இனங்களுக்குள் மோதல்கள் ஏற்படுத்தும் வகையில் அரசினால் முன்னெடுக்கப்படும் காய் நகர்த்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வட மாகாண முதல்வர் வலியுறுத்தினார். பாதுகாப்புத் தரப்பினர் வசமிருந்த 120 பேருக்கு சொந்தமான காணிகள் இந்நிகழ்வின் போது அரசாங்க அதிபர்களிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் இதற்கான ஆவணங்களைப் பொறுப்பேற்றனர்.