30 இலட்சத்துக்காக  விஹாராதிபதி மீது சூடு

கதிர்காமம் விஹாராதிபதி மீதான துப்பாக்கிச் சூட்டில் மூவருக்கு விளக்கமறியல்

by Chandrasekaram Chandravadani 18-06-2018 | 11:00 AM
கதிர்காமம் கிரிவிகாரையின் விஹாராதிபதி கொபவக தம்மிந்த தேரர் மீதான துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய மூவரும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திஸ்ஸமஹாராம நீதிமன்றத்தில் இன்று அதிகாலை ஆஜர் படுத்தியதையடுத்து, இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்களையும் இன்று திஸ்ஸமஹாராம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிப் பிர​யோகத்தை மேற்கொள்ளவந்த சந்தேநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் 30 இலட்சம் ரூபா ஒப்பந்தத்துக்காக நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஏனைய மூன்று சந்தேக நபர்களும், தங்காலை குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று முன்தினம் இரவு பெபிலியான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். மஹாசென் தேவாலயத்தின் பிரதான பூசகராக செயற்பட்ட அசேல பண்டார எனும் சந்தேக நபரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, சந்தேநகபர்கள் நேற்று பகல் 1.30 அளவில் கதிர்காமம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து, திஸ்ஸமகாராம நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப் பட்டனர். கதிர்காமம் கிரிவிகாரையின் விஹாராதிபதி கொபவக தம்மிந்த தேரரும் மற்றுமொரு தேரரும் கடந்த 12ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினர். தேரர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.