உமா ஓயா மூலம் விரைவில் நீர் மின் உற்பத்தி

உமா ஓயா திட்டம் மூலமான நீர் மின் உற்பத்தியை விரைவில் ஆரம்பிக்க முடியும் என பொறியியலாளர்கள் நம்பிக்கை

by Bella Dalima 18-06-2018 | 9:40 PM
Colombo (News 1st)  உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான நீர் மின் உற்பத்தியை விரைவில் ஆரம்பிக்க முடியும் என பொறியியலாளர்கள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர். இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 120 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது. உமா ஒயா திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் நீர் கசிவு ஏற்பட்டாலும், நிலத்தடி நீர் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளன. புஹுல்பொலயில் இருந்து நேரடியாக கரந்தகொல்ல பிரதான சுரங்கத்திற்கு நீர் கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து நிலத்தடி மின் உற்பத்தி நிலையத்தை செயற்படுத்துவதற்கான குழாய் பொருத்தும் பணி மிகவும் கடினமானது. இலங்கையில் முதன்முறையாக இத்தகைய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இரும்புகளைப் பொருத்தும் நடவடிக்கையில் தலா மூன்று ஊழியர்கள் வீதம் பயன்படுத்தப்படுவதுடன், அவர்களின் சேவைக்காலம் சில மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களை ஆஸ்திரிய நிறுவனம் பொருத்தியுள்ளது. மின் உற்பத்தியின் பின்னர் நீர் விவசாய நிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான திட்டங்களை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.