பேர்பச்சுவலின் 46,000 கொடுக்கல் வாங்கல்கள்!

by Staff Writer 17-06-2018 | 9:22 PM

2015ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை, பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனம், 46ஆயிரம் தடவைகள் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்தப்பட்ட சில காசோலைகளுக்கு உரிமையாளர் அன்றி வேறு நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த கொடுக்கல் வாங்கல்கள், காசோலைகள் மற்றும் வவுச்சர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சில கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள், சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுனர் 2016ஆம் ஆண்டு செய்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளூடாக இந்தத் தகவல்கள் வௌியாகியுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழவின் அறிக்கையின் அனைத்து இணைப்புக்களையும் பாராளுமன்றத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னான்டோவுக்கு கடந்த வாரம், அனுப்பி வைக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார். இணைப்புக்கள் கிடைத்தவுடன், அதுதொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னான்டோவிடம் நியூஸ்பெர்ஸ்ட் வினவியது. இதற்கான பதில் கடிதம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். மத்திய வங்கி முறிகள் அறிக்கை அல்லது அதன் இணைப்புக்கள் தொடர்பிலான விடயங்கள் குறித்து, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னான்டோ தெரிவித்தார்.