32 கோடி ரூபா கடன் !

பெற்றோலிய கூட்டுத்தாபனம் ரயில்வே திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 32 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் இதுவரை செலுத்தப்படவில்லை

by Staff Writer 17-06-2018 | 5:06 PM

பெற்றோலிய கூட்டுத்தாபனம் ரயில்வே திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 32 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை செலுத்தவில்லையென ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ரயில்வே திணைக்களத்திடம் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிக்கு இந்த பணத்தை செலுத்தவேண்டியிருந்ததாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் எஸ்.பி.விதானகே குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான 49 காணிகளை பெற்றோலிய திணைக்களம் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளது. குத்தகை பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பல சந்தரப்பங்களில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகேவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. குத்தகை பணத்தை செலுத்துமாறு பல தடவைகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக அவர் கூறினார். எனினும் இதுவரையில் அதற்கான எவ்வித பதிலையும் கூட்டுத்தாபனம் வழங்கவில்லையெனவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கூறினார். இந்த விடயம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த துறையினரை தொடர்புகொள்ள நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.