அகற்றப்பட்ட கேபிள்கள் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளன

யாழ்ப்பாணத்தில் அகற்றப்பட்ட கேபிள் இணைப்புகள் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பு

by Staff Writer 16-06-2018 | 9:27 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணத்தில் அகற்றப்பட்ட கேபிள் இணைப்புகள் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மின்சாரக் கம்பங்களூடாக பொருத்தப்பட்ட கேபிள் இணைப்புகள் காரணமாக மின் பாய்ச்சல் ஏற்பட்டு யாழ்ப்பாணத்தில் இரு உயிரிழப்புகள் பதிவாகியதை அடுத்து, அதன் தாக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து, மின்சாரக் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையை அடுத்து இந்த சட்டவிரோத கேபிள் இணைப்புகளின் பாதிப்புகள் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தது. எனினும், கேபிள்கள் அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. யாழ்ப்பாணம் - வல்லைவௌியூடாக 11,000 மெகா வாட்ஸ் உயர் மின் அழுத்தம் கடத்தப்படுகின்ற மின்சாரத் தூண்களிலேயே கேபிள் வயர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அங்கு அபாய நிலை தோன்றியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர். இந்த நிலையில், வடக்கு - கிழக்கில் சட்டரீதியாக கேபிள் தொலைக்காட்சி இணைப்புகள் வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் அந்த இணைப்புகளை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபையின் கம்பங்களை பயன்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இலங்கை மின்சார சபையின் வட பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளர் கலாநிதி வி.ஜே.பி.யூ. குணதிலகவை சுட்டிக்காட்டி அந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனினும், மின் கம்பங்களில் கேபிள் வயர்களை பொருத்துவதற்கு எவருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்த்தன தெரிவித்தார். அமைச்சின் அனுமதியின்றி செயற்படுவதற்கு மின்சார சபைக்கு அதிகாரம் உள்ளதா?