முள்ளுத்தேங்காய் பயிரிடுவது சூழலுக்கு உகந்ததா?

பாரம்பரிய பயிர் செய்கையைக் கைவிட்டு முள்ளுத்தேங்காயை பயிரிடுவது சூழலுக்கு உகந்ததா?

by Bella Dalima 16-06-2018 | 9:08 PM
Colombo (News 1st)  முள்ளுத்தேங்காய் என்ற பெருந்தோட்டப் பயிர் அண்மைக்காலமாக மலையக பெருந்தோட்டத்துறை மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. கேகாலை மாவட்டத்தின் இறப்பர் பெருந்தோட்டங்களிலும் சில மாவட்டங்களிலும் மாற்றுப் பயிர்ச்செய்கையாக முள்ளுத்தேங்காயை மேற்கொள்ளும் முனைப்புகள் தலைதூக்கியுள்ளன. இந்திய தொழிலாளர்கள் 1800-களில் ரயில் பாதை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுடன், அதன் பின்பு கோப்பி, தேயிலை, இறப்பர், தென்னை பயிர்ச்செய்கைக்காக அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். கடந்த 200 வருடங்களாக பயிர்கள் மாறி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகள் மாறி வருகின்ற நிலையில், இம்மக்களின் வாழ்வியலில் பாரியதொரு மாற்றம் ஏற்படாமையை புள்ளிவிபர ரீதியாக உறுதிப்படுத்த முடியும். இந்த நிலையில், முள்ளுத்தேங்காய் என்ற பயிர் தற்போது பெருந்தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. மலேசியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் மிக முக்கியமான அந்நிய செலாவணியாக முள்ளுத்தேங்காயை பயன்படுத்தி பெறப்படும் பாம் எண்ணெய் (Palm Oil) திகழ்கின்றது. எவ்வாறாயினும், எமது நாட்டில் இப்பயிர் செய்கையினால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். தேயிலை, இறப்பர் செய்கையைவிட அதிகமான நீரை முள்ளுத்தேங்காய் உறிஞ்சுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. முள்ளுத்தேங்காய் செய்கைக்காக பல இலட்சக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்படுவதுடன், ஏற்கனவே செய்யப்படுகின்ற பயிர் செய்கையை அழித்து இந்த முள்ளுத்தேங்காய் செய்கை இடம்பெறுவதாக மக்கள் சுட்டிக்காட்டினர். இந்த பயிர் செய்கைக்கு மிகக்குறைந்த தொழிலாளர்களே தேவைப்படுவதுடன், இதனால் தொழில் வாய்ப்புகளும் அற்றுப்போகும் அபாயம் உருவாகியுள்ளது. அத்துடன், அதிகளவிலான இரசாயன பூச்சிக்கொல்லிகள், பசளைகள் பயன்படுத்தப்படுவதால் நீர் வளங்கள், சுற்றுப்புறச்சூழல் ஆகியன மாசடைகின்றன. இலங்கையில் நீண்டகாலமாக தேங்காய் எண்ணெயே பயன்படுத்தப்பட்டு வருவதுடன், பாரம்பரிய பயிர் செய்கையான தெங்கு, தேயிலை, இறப்பர் பயிர்களை ஏன் கைவிட வேண்டுமென்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர். கேகாலை மாவட்டத்தில் முள்ளுத்தேங்காய் செய்கையை இடைநிறுத்துமாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது பணிப்புரை விடுத்தார். இதன் பின்னர் ஜனாதிபதியும் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுதுடன், அவரும் செய்கையை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தார். இருப்பினும் கேகாலை மாவட்டத்தில் தொடர்ந்தும் இந்த பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் அமைச்சரிடம் நியூஸ்ஃபெஸ்ட் இன்று வினவியது. தமது பணிப்புரைக்கு பின்னர் கேகாலை மாவட்டத்தில் முள்ளுத்தேங்காய் உற்பத்தி மெற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை எனவும், இது தொடர்பில் தாம் ஆராய்வதாகவும் அமைச்சர் நவீன் திசாநாயக்க பதிலளித்தார்.