ஆலோசகர் பதவியை மேலும் இருவர் நிராகரிப்பு

கிரிக்கெட் நிறுவன ஆலோசகராக இணையும் கோரிக்கையை நிராகரித்த குமார் சங்கக்கார, அரவிந்த டி சில்வா

by Bella Dalima 16-06-2018 | 8:38 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக இணையுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்த கோரிக்கையை முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவரான குமார் சங்கக்கார நிராகரித்துள்ளார். கிரிக்கெட் நிர்வாக செயற்பாடுகளுக்கான ஆலோசகர்களாக குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்க யோசனை முன்வைப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லி டி சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள குமார் சங்கக்கார முன்னரும் 06 மாத காலம் விசேட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் கீழ் தாம் செயற்பட்டுள்ளதாகவும் அது பலனற்ற, காலத்தை வீணடிக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார். அந்தக் குழு வழங்கிய ஒரு பரிந்துரை கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சரும் அவ்வாறான குழுவுக்கே அழைப்பு விடுக்கிறார் என நினைப்பது நியாயமற்றதாக இருந்தாலும் இலங்கை கிரிக்கெட் தற்காலிக அல்லது குறுகிய கால உடனடித் திட்டங்களை விட நீண்ட கால நிரந்தர மாற்றமே தேவைப்படுகிறது என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கத்துடன் போதிய காலத்தை பெற்றுக்கொள்வதற்காக தம்மை பயன்படுத்துவதாக உணரும் நேர்மையான பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அவர்களின் காலத்தையும், உழைப்பையும் அர்ப்பணிக்க முன்வர மாட்டார்கள் எனவும் குமார் சங்கக்கார அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன், ரொஷான் மஹாநாம ஆகியோரும் விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கையை நேற்று நிராகரித்தனர். எனினும், இது தொடர்பில் அரவிந்த டி சில்வாவிடம் இன்று நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. தற்போதைய நிலையில் தம்மால் அந்த கோரிக்கைக்கு இணங்க முடியாது என அவர் கூறினார்.