ராஜிவ் கொலை: 7 பேரின் விடுதலை நிராகரிக்கப்பட்டமைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ராஜிவ் கொலை: 7 பேரின் விடுதலை நிராகரிக்கப்பட்டமைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ராஜிவ் கொலை: 7 பேரின் விடுதலை நிராகரிக்கப்பட்டமைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2018 | 4:31 pm

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்கக் கோரிய மனு நிராகரிக்கப்பட்டமைக்கு தமிழக அரசியல் பிரமுகர்கள் சிலர் கண்டனம் வௌியிட்டுள்ளனர்.

குறித்த 7 பேரையும் விடுவிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது என மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிப்பதாக மு.க. ஸ்டாலின் அறிக்கையூடாகக் குறிப்பிட்டுள்ளார்.

7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என 2014 ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் எடுத்திருந்த நிலையில், அது குறித்து மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தார்.

எனினும், சுமார் 4 வருடங்கள் அமைதியாகவிருந்த மத்திய அரசு, திடீரென விடுதலையை நிராகரித்திருப்பது சிறிதும் மனிதநேயமற்ற முடிவாகவே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இவ்வாறான தீர்மானத்தை குடியரசுத் தலைவர் மூலம் அறிவித்திருப்பது, மத்திய அரசு தமக்குள்ள பொறுப்பைத் தட்டிக்கழிப்பது போல் அமைந்துள்ளது எனவும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசின் அமைச்சரவை 7 பேரையும் விடுதலை செய்வதற்கு ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் தனது கருத்தை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பேரறிவாளனை கருணைக்கொலை செய்யுமாறு அரசாங்கத்திடம் மனுவொன்றைக் கையளிக்கவுள்ளதாக பேரறிவாளனின் தாயார் தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்வதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்தா விடின், பேரறிவாளனை கொலை செய்து விடுமாறும் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர், தமிழக அரசின் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ளார்.

இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்