நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி
by Staff Writer 16-06-2018 | 3:40 PM
Colombo (News 1st) நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை விடுத்துள்ளனர்.
ஒரு மாத காலம் நோன்பு நோற்று, தியாகத்தையும் சமாதானத்தையும் முதன்மைப்படுத்தும் ஈதுல் பித்ர் ஈகைத்திருநாள் மூலம் உன்னதமான செய்தியினை உலகிற்கு எடுத்துரைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழ்நிலையில், பெரும் இக்கட்டான நிலைமையை சந்தித்துள்ள தற்கால உலக சமூகங்களுக்கு இடையில் நல்லொழுக்கத்தையும் நேசக்கரத்தையும் நீட்டி, நேர்மையாக நடந்துகொள்வதிலேயே சமாதானம் மற்றும நல்லிணக்கம் ஆகியவற்றை ஏறபடுத்தும் இதமான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதையே ரமழான் நோன்பு கற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வேதம் என்ற எல்லையை கடந்து, உன்னதமான மனிதத்துவத்துடன் உறவாடும் நேர்மையான நோக்கைக் கொண்ட இலங்கையர்க்கும் உலகவாழ் இஸ்லாமியர்க்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தம்மிடம் குடிகொண்டிருக்கும் பேராசை, ஆசை போன்ற தீய குணங்களைக் கட்டுப்படுத்தி மனிதாபிமானம், தாராள மனப்பான்மையை வளர்ப்பதற்கு ரமழான் நோன்புக் காலத்தில் கிடைக்கும் உந்து சக்தி அளப்பரியதாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இது முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு மனித சமுதாயத்திற்கும் புதியதோர் வாழ்க்கை நோக்கினை எடுத்தியம்பும் பெறுமதி மிக்க சமயக் கிரியை ஒன்றாகும் எனவும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்மீக, சமூகம் சார்ந்த பெறுமதிகள் உலகிற்கு ஒளியூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்னிறுத்தி சகோதர முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஈதுல் பித்ர் பெருநாளாக அமைய வேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுய தியாகம் மற்றும் மற்றவர்களுக்கு உதவுதல் என்பவற்றின் மகத்துவம் தொடர்பில் புனித ரமழான் மாதம் நினைவூட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு இன மற்றும் சமய ரீதியான பின்னணிகளைக்கொண்ட மக்கள் மகிழச்சியுடன் ஐக்கியப்படுவதற்கு இப்புனித மாதத்தில் வாய்ப்புக் கிட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புனித நாளினைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தில், மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தல், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் போன்ற விடயங்களை மறக்காமல் இருப்பதற்கும் உறுதி பூண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
தமது எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்றிருக்கும் மக்கள் தமது எதிர்பார்ப்புகளையும் மகிழ்ச்சியையும் அடைந்து கொள்வதற்கு வாய்ப்பு கிட் ட வேண்டும் என பிரார்த்திப்பதாக இரா. சம்பந்தன் வாழ்த்துச் செய்தியினூடாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவரும் தமது திருநாளை மகிழ்வுடன் கொண்டாடவும், ஏனைய மதத்தை சார்ந்த சகோதர சகோதரிகளுடன் நட்புரிமையுடன் பழகவும் இந்த ஈகைத் திருநாள் சிறப்பு நிகழ்வுகள் வழிசமைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.