யானைகளை இடம் மாற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்

சிங்கராஜ வனத்திலிருந்து 2 யானைகளை இடம் மாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இடைநிறுத்தம்

by Bella Dalima 15-06-2018 | 9:39 PM
Colombo (News 1st)  ஜனாதிபதியின் உத்தரவை மீறி சிங்கராஜா வனப்பகுதியிலுள்ள இரண்டு யானைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று பிற்பகல் நிறுத்தப்பட்டது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், விமானப்படையின் கால்நடைப் பிரிவு அந்த நடவடிக்கையிலிருந்து விலகிக்கொண்டது. சிங்கராஜ வனத்திலுள்ள கடைசி இரண்டு யானைகளையும் வேறிடத்திற்கு மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதென யுனெஸ்கோ மரபுரிமை தொடர்பான நிலையத்தின் பணிப்பாளர் மெக்டில்ட் ரோஸ்லர் கடிதமொன்றினூடாக அறிவித்திருந்தார். இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதுவருக்கு இந்தக் கடிதம் இம்மாதம் 5 ஆம் திகதி அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்த அதேவேளை, உலக சுற்றுச்சூழல் மரபுரிமை தொடர்பான அறிவுறுத்தல் பகுதியொன்றும் தூதுவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தத் தகவலை, வெளிவிவகார அமைச்சினூடாக சுற்றுச்சூழல் அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சுக்கு, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளரொருவர் கடிதமொன்றினூடாக அறிவித்துள்ளார். இந்த சுற்றுச்சூழல் அமைப்பை எந்த வகையிலேனும் மாற்றத்திற்கு உட்படுத்தாமலிருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமையவே, இரண்டு யானைகளையும் பிடிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார். சிங்கராஜ வனப்பகுதியை சூழவுள்ள கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்து, அங்குள்ள கடைசி இரண்டு யானைகளையும் அகற்றுவதற்கு கடந்த சில நாட்களாக வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். குறித்த கடிதம் கிடைக்கப்பெற்று ஒரு மாதத்திற்குள் பதிலை எதிர்பார்ப்பதாக யுனெஸ்கோ அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது. இரண்டு யானைகளையும் வனத்திலிருந்து அகற்றும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சுற்றுச்சூழல் அமைச்சுக்கு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பான விடயங்கள் குறித்து, முறையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோரியிருந்தார். உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சிங்கராஜ வனப்பகுதி, அதிலிருந்து நீக்கப்படும் நிலையை கருத்திற்கொண்டு, ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்துள்ள போதிலும், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் சரத் பொன்சேகா, அதற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் செயற்பட்டுள்ளார். இரண்டு யானைகளையும் பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை இன்றும் முன்னெடுக்குமாறு அமைச்சர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வன ஜீவராசிகள் திணைத்தின் கால்நடைப்பிரிவு இந்நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால், இரண்டு யானைகளையும் பிடிக்கும் நடவடிக்கையில் விமானப்படையின் கால்நடைப்பிரிவின் இரண்டு வைத்தியர்கள் ஈடுபட்டிருந்தனர். எனினும், இந்த இரண்டு கால்நடை வைத்தியர்களையும் விமானப்படை இன்று மாலை மீள அழைத்துள்ளது.