ஆலோசகர்களாக செயற்பட முன்னாள் வீரர்கள் மறுப்பு

கிரிக்கெட் நிறுவன ஆலோசகர்களாக செயற்படுமாறு கோரிக்கை: முன்னாள் வீரர்கள் மூவர் நிராகரிப்பு

by Bella Dalima 15-06-2018 | 8:22 PM
Colombo (News 1st)  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகர்களாக செயற்படுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் மூவர் நிராகரித்துள்ளனர். கிரிக்கெட் நிர்வாக செயற்பாடுகளுக்கான ஆலோசகர்களாக குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்க யோசனை முன்வைப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லி டி சில்வா நேற்று (14) அறிவித்தார். அதற்கு பதிலளித்துள்ள மஹேல ஜயவர்தன, கடந்த காலத்தில் ஒரு வருடம் கிரிக்கெட் குழுவிலும் 6 மாதங்கள் விசேட ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக செயற்பட்ட போதிலும் அந்தக் குழுக்களின் ஊடாக எந்தவொரு பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லை என கூறியுள்ளார். நடைமுறையிலுள்ள படிமுறை தொடர்பாக தமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலத்தை வீணடிக்கும் இதுபோன்ற பலனற்ற நடவடிக்கைகளுக்கு தம்மை பலிகடாவாக்க வேண்டாம் என்றும் மஹேல ஜயவர்தன கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, ஆஷ்லி டி சில்வாவின் அறிக்கைக்கு முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான ரொஷான் மஹாநாமவும் பதிலளித்துள்ளார். நேர்மை, நடுநிலைமை, அரசியல் தலையீடுகளற்ற சந்தர்ப்பத்தில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணையத் தயார் என ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் தாம் அவ்வாறானதொன்றைக் காணவில்லை எனவும், அதனால் ஒன்றிணைய இயலாது என்றும் ரொஷான் மஹாநாம, விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்த யோசனைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், என்றாலும் இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிர்வாக ரீதியாக இந்த தள்ளப்படும் வரை காத்திருந்தமை கவலைக்குரியது எனவும் முன்னாள் நட்ச்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். மஹேல ஜயவர்தனவின் கருத்தை தாமும் ஏற்பதாக பதவியை நிராகரித்துள்ள முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவர்கள் ஆலோசகர் பதவியை நிராகரிப்பது எந்தளவிற்கு நியாயமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால பயணத்திற்கு அவர்களின் சேவை அவசியம் என்பதால், அவர்கள் அது குறித்து மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.