by Bella Dalima 15-06-2018 | 8:55 PM
Colombo (News 1st) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அலைக்கழிக்காமல் கணிசமான நட்டஈட்டையாவது வழங்குமாறு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு இந்த கோரிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசனின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், காணாமற்போனோர் தொடர்பில் மீண்டும் மீண்டும் விசாரணைகளை மேற்கொண்டு, விரக்தியின் எல்லைக்கு சென்றுள்ள மக்களை அழவைப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கணிசமான அளவு நட்டஈட்டைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தை தாமதிக்கும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு எஞ்சியிருக்கும் இரண்டு வருடங்களுக்குள்ளும் எதனையும் செய்ய முடியாமற்போகும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு அறிக்கையினூடாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் வௌிப்படையாக தொடர வேண்டும் எனவும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் கூறியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதிக்குள்ளான நிலையில் வாழ்கின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மக்களுக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகம் காத்திருக்கும் நிலையில், அதற்கு வழிவிட வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வளவு நட்ட ஈடு வழங்கினாலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அது ஈடாகாது என கூறியுள்ள அமைச்சர் மனோ கணேசன், இந்த நடவடிக்கை நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை சிறிதேனும் தூக்கி நிறுத்தும் என கூறியுள்ளார்.