கதிர்காமம் துப்பாக்கிச்சூடு:சந்தேகநபர் கைதாகவில்லை

கதிர்காமம் கிரிவெஹர விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை

by Staff Writer 15-06-2018 | 10:26 PM
Colombo (News 1st) கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி தம்மிந்த தேரர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட சந்தேகநபரை இதுவரை கைது செய்ய முடியவில்லை. அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் நாட்டிலிருந்து தப்பிச்செல்வதை தடுப்பதற்காக குடிவரவு, குடியகல்வு பிரிவுக்கு அறிவித்துள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த தேரர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த 12 ஆம் திகதி இரவு விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களில் பொலிஸார் தெரிவித்தனர். கதிர்காமம் மகசேன் தேவாலயத்தின் முன்னாள் பூசகரான அசேல பண்டார என்பவரே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்தனர். அவரது சகோதரர் மற்றும் தேவாலயத்தில் பணிபுரிந்த உதவியாளர் ஆகியோர் ஏனைய சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தாலும், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிப் பிரயோக சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் கதிர்காமம் பொலிஸ் நிலையத்திலுள்ளது. சந்தேகநபர்களைக் கைது செய்ய 8 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நாளையோ மறு தினமோ அவர்களைக் கைது செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். மகசேன் தேவாலயத்தின் உரிமை தொடர்பான பிரச்சினைக்கு அப்பால், இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.