by Bella Dalima 15-06-2018 | 4:37 PM
1934 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் முதல் போட்டியிலேயே அதிகக் கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று போட்டியை நடத்தும் அணியாக ரஷ்யா வரலாற்றில் இணைந்துள்ளது.
உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷ்ய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
21 ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ரஷ்யாவில் இலங்கை நேரப்படி நேற்றிரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகியது.
பல்வேறு கலையம்சங்களுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சவுதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், FIFA அமைப்பின் தலைவர் ஜியான்னி இன்பாண்டினோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல் போட்டியில ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டி ஆரம்பித்து 12 ஆவது நிமிடத்தில் ரஷ்ய அணியின் கசின்ஸ்கீ கோல் அடித்தார்.
அதனையடுத்து, 43 ஆவது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோலடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் ரஷ்ய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதி நேர ஆட்டத்திலும் ரஷ்ய அணி 3 கோல்களைப் போட்டது.
எனினும், சவுதி அரேபிய அணியினால் இறுதி வரை கோல் போட முடியவில்லை.
இறுதியில் ரஷ்ய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
இன்று நடைபெறவுள்ள போட்டிகளில் எகிப்து - உருகுவே, மொராக்கோ - ஈரான், போர்த்துக்கல் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.