இந்து மத அலுவல்களிலிருந்து காதர் மஸ்தான் நீக்கம் 

இந்து மத அலுவல்கள் அமைச்சிற்கான பொறுப்புகள் காதர் மஸ்தானிடம் இருந்து மீளப்பெறப்பட்டன

by Bella Dalima 14-06-2018 | 7:37 PM
Colombo (News 1st) பிரதி அமைச்சர் கே. காதர் மஸ்தான் மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி விடயங்களுக்கான பிரதி அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, இந்து மத அலுவல்கள் அமைச்சிற்கான பொறுப்புகள் அவரிடம் இருந்து மீளப்பெறப்பட்டுள்ளன. மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி, இந்து மத அலுவல்கள் பிரதி அமைச்சராக கே. காதர் மஸ்தான் நேற்று முன்தினம் (12) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த நியமனம் தொடர்பில் இந்து மத குருமார், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்கமைய, பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் வசமிருந்த இந்து மத அலுவல்கள் அமைச்சுக்கான பொறுப்புகள் மீளப்பெறப்பட்டுள்ளன. பிரதி அமைச்சரின் நியமனம் தொடர்பில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகம் தமக்கு அறிவித்ததாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இந்து மத அலுவல்கள் பிரதி அமைச்சர் நியமனத்தை கண்டிக்கும் வகையில் இன்று கொழும்பில் பேரணியொன்றும் நடத்தப்பட்டிருந்தது. பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பமான பேரணி, இந்து மத அலுவல்கள் அமைச்சு வரை முன்னெடுக்கப்பட்டது. இதில் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்து மத அலுவல்கள் பிரதி அமைச்சரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பிலும் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் மற்றும் இந்து குருமார் பேரவை என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம், மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகில் நடைபெற்றது. இதேவேளை, இந்த நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக இந்து மாணவர்களும் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.