நட்டத்தை ஏற்படுத்தியவர் சலுகைகளைக் கோரலாமா?

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பில்லியன் கணக்கில் நட்டத்தை ஏற்படுத்தியவர் சலுகைகளைக் கோரலாமா?

by Bella Dalima 13-06-2018 | 9:13 PM
Colombo (News 1st)  மூன்றாண்டுகளில் நாட்டின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவையை பில்லியன் கணக்கில் நட்டம் அடையும் நிலைக்குத் தள்ளிய பிரதம நிறைவேற்றதிகாரி சுரேன் ரத்வத்த முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் நேற்று செய்தி வௌியிட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் ஆட்சிப்பீடமேறியதை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர் சரித்த ரத்வத்தவின் சகோதரரான சுரேன் ரத்வத்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டார். மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா சம்பளம், அதற்கான வரி, வருடாந்த வருமான இலக்கின் அடைவுமட்டத்திற்கு அமைய 10 மில்லியன் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு என்பவற்றை வழங்குவதாக அவருடனான சேவை ஒப்பந்தத்தின்போது இணக்கம் காணப்பட்டது. பணிப்பாளர் சபையின் பொது இணக்கப்பாடு கிடைக்காமையினால், 6 மாத கால தகைமை காண் சேவைக்கு உள்வாங்கப்பட்ட சுரேன் ரத்வத்த குறித்த காலப்பகுதியின் பின்னர் சேவை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பணிப்பாளர் சபைக்கு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. நிறுவனத் தலைவரும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் தனித்தனியாக இந்த விடயத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பணிப்பாளர் சபை யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி சுரேன் ரத்வத்தவின் 6 மாத காலம் நிறைவுபெறவிருந்ததுடன், அதற்கு முன்னர் மேலும் 6 மாதத்திற்கு அவரது சேவைக்காலத்தை நீடிக்க வேண்டும் என அப்போதைய அரச தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு குழு யோசனை முன்வைத்திருந்தது. சுரேன் ரத்வத்தவின் சேவை செயற்திறனற்றதாகக் காணப்பட்டமையால் அவரது சேவையினை இடைநிறுத்த வேண்டும் என பணிப்பாளர் சபையின் ஒரு சில உறுப்பினர்கள் கருத்து முன்வைத்திருந்தனர். பணிப்பாளர் சபையின் அறிக்கைகளிலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் இறுதியில் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டதை அடுத்து, சுரேன் ரத்வத்தவின் சேவை நிரந்தரமாக்கப்பட்டது. 52 ஆவது வயதில் பிரதம நிறைவேற்றதிகாரி பதவிக்கு நியமனம் பெற்று மூன்று வருடங்களின் பின்னர் நிறுவனத்தை பல பில்லியன் கணக்கான நட்டம் அடையும் நிலைக்கு தள்ளிய சுரேன் ரத்வத்த தற்போது ஓய்வு பெறுவதற்காக பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு வரை சேவையாற்றுவதற்கான இயலுமை இருந்தும் முன்கூட்டியே ஓய்வு பெறுவதால் தமக்கு 6 மாத வரியுடன் கூடிய சம்பளம் தேவைப்படுவதாக அவர் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோவுக்கு அறிவித்துள்ளார். ஐூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து 6 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறவுள்ள சர்வதேச விமான சேவை நிலையத்தின் சம்மேளனக் கூட்டத்தில் உத்தியோகப்பூர்வ பதவிகளை வகிக்கும் ஒருவராக பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ள அவர், ஜூன் 7 ஆம் திகதியிலிருந்து வருடாந்த விடுமுறை அடிப்படையில் செயற்படவுள்ளதாகக் கூறியுள்ளார். 6 மாத சம்பளத்தைக் கோரியுள்ள சுரேன் ரத்வத்த ஜூன் முதலாம் திகதியிலிருந்து இலங்கையில் வசிக்காமையால், அவுஸ்திரேலிய சட்டங்களுக்கு அமைய வரி செலுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கே உள்ளது. அனைத்து நிதியையும் நாட்டிற்கு வெளியேயுள்ள வங்கிக் கணக்குகளுக்கு அவுஸ்திரேலிய டொலராக செலுத்துமாறும் அவர் கோரியுள்ளார். தனது மனைவியுடன் அவுஸ்திரேலியா சென்றுவர விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வர்த்தகர் வகுப்பிற்கான 6 விமானப் பயணச்சீட்டுகளை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோவிடம் வினவியபோது, சுரேன் ரத்வத்தவின் வேண்டுகோளை விட அவருக்கு வழங்க இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே முக்கியமானது என தெரிவித்தார். புதிய பிரதம நிறைவேற்றதிகாரி ஒருவர் நியமிக்கப்படும் வரை சுரேன் ரத்வத்த தொடர்ந்தும் அந்தப் பதவியில் கடமையாற்றி வருகின்றார். சுரேன் ரத்வத்த சேவையாற்றிய காலத்தில் 2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் 16.3 பில்லியன் ரூபா நட்டம் அடைந்ததுடன், 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நட்டம் 12 பில்லியன் ரூபாவாகும். கடந்த வருடம் நட்டத் தொகை 28.5 பில்லியன் ரூபா வரை அதிகரித்திருந்தது. நிறுவனத்தை நட்டம் அடையும் நிலைக்குத்தள்ளி விட்டு, முன்கூட்டியே ஓய்வுபெறுவதற்காக சுரேன் ரத்வத்தே கோரியுள்ள பணத்தை பொதுமக்களின் நலன்புரி விடயங்களுக்காக பயன்படுத்தினால் எத்தனை வீடுகளை அமைத்திருக்க முடியும்? சிறுநீரக நோயினால் அவதியுறும் மக்கள் வாழும் எத்தனை கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற்றுக்கொடுத்திருக்கலாம்? புற்றுநோயால் பீடிக்கப்பட்ட எத்தனை நோயாளர்களுக்கு உதவி செய்திருக்க முடியும்?