மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமிற்கு 19 மாத சிறைத்தண்டனை

by Bella Dalima 13-06-2018 | 9:27 PM
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமிற்கு 19 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூம் சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணைகளுக்காக தனது கையடக்கத் தொலைபேசியை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தெரிவித்து, அப்துல் கயூமிற்கு சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவின் தற்போதைய ஜனாதிபதி யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டாவது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூம், கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். மாலைத்தீவில் 30 வருடங்களாக அப்துல் கயூமின் ஆட்சி நிலவியமை குறிப்பிடத்தக்கது.