சட்டவிரோத கேபிள் ஔிபரப்பை தடைசெய்யுமாறு முறைப்பாடு

சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி ஔிபரப்பை தடை செய்யுமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் முறைப்பாடு

by Staff Writer 13-06-2018 | 8:07 PM
Colombo (News 1st)  வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலுள்ள சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி சேவைகளை தடுக்க வேண்டியதன் அவசியத்தை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தள ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கம், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் இன்று கோரிக்கையொன்றை முன்வைத்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி சேவைகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, இணையத்தள ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சில கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஔிபரப்பு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகள் தொடர்பில் எவ்வித ஒழுங்குபடுத்தல்களும் இடம்பெறுவதில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி சேவைகளுடன் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட சிலருக்கு தொடர்புள்ளமையும் தெரியவந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை இன்று நேரில் சந்தித்த இணையத்தள ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கத்தின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி சேவைகளை நடத்திச்செல்கின்ற நிறுவனங்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய பட்டியலொன்றும் இன்று ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் 18 சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருகோணமலையில் நான்கு சேவைகளும், அம்பாறையில் இரண்டு சேவைகளும், மலையகத்தில் 13 சேவைகளும் இந்த அமைப்பினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.