கதிர்காமம் விகாராதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம்

கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

by Bella Dalima 13-06-2018 | 3:24 PM
Colombo (News 1st)  கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட இரு தேரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான தேரர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். நேற்று (12) இரவு 11 மணியளவில் விகாரைக்கு அருகில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த தேரர்கள் தெபாரவெவெ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். பின்னர், கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார். காரில் வந்த மூவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மகசென் ஆலய உரிமை தொடர்பான பிரச்சினையே இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணம் என பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இந்த ஆலயம் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் கிரி விகாரையின் விகாராதிபதிக்கு உரித்தானது என அறிவிக்கப்பட்டிருந்தது. மகசென் ஆலயத்தின் முன்னாள் பூசகரின் திட்டமிடலுக்கு அமைய, மூவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த விடயங்களை விகாராதிபதிக்கு பாதுகாப்பு வழங்கிய உத்தியோகஸ்தர் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் 8 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.