ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு: பிரதீப் மாஸ்டரிடம் குறுக்கு விசாரணை

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு: பிரதீப் மாஸ்டரிடம் குறுக்கு விசாரணை

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு: பிரதீப் மாஸ்டரிடம் குறுக்கு விசாரணை

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2018 | 8:48 pm

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான உண்மை விளம்பல் விசாரணையின் மற்றுமொரு கட்டம் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். இஸர்டீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜாவிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதவ தென்னகோன் பிரதிவாதியிடம் குறுக்குக் கேள்விகளூடாக விசாரணைகளை நடத்தினார்.

புலனாய்வுத்துறையினரின் அச்சுறுத்தலுக்கு அமைய தாம் வாக்குமூலம் வழங்கியதாக பிரதிவாதிகளால் ஏற்கனவே மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

எனினும், பல தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஏன் இந்த விடயத்தை குறிப்பிடவில்லை என அரச தரப்பு சட்டத்தரணி பிரதிவாதியிடம் கோள்வி எழுபியிருந்தார்.

இது தொடர்பில் கடிதம் மூலம் ஏற்கனவே நீதிபதிக்கு அறிவித்துள்ளதாக சந்தேகநபர் குறிப்பிட்டார்.

எனினும், இந்த வழக்கிலிருந்து தப்பிக்கொள்வதற்கு பிரதிவாதிகளால் வடிவமைக்கப்பட்ட நாடகமே குறித்த கடிதம் என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2014 இல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 2015 ஆம் ஆண்டு குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் ஏன் காலம் தாழ்த்தி கடிதத்தை எழுதினர் எனவும் சட்டத்தரணி கேள்வி எழுபியுள்ளார்.

திகதி குறிப்பிடப்படாத குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பொய் எனவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

பிரதிவாதிகளால் நீதிபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடிதம் பொய் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிறைச்சாலையிலுள்ள அனைத்து ஆவணங்களும் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2014, 2015, 2016, 2017, 2018 ஆம் ஆண்டுகளுக்கான சிறைச்சாலைகள் பதிவுப் புத்தகங்களும் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

பிரதிவாதிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒன்றுக்கு பின் முரணான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சாட்சி விசாரணைக்கு மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர், மாவட்ட நீதிமன்ற பதிவாளர், மற்றுமொரு சாட்சியாளரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், குறித்த மூவரிடமும் சாட்சி பதிவுகளை மேற்கொள்வதற்கு நேரம் போதாமையால் எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்