புல்லுமலை குடிநீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம்

புல்லுமலை குடிநீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம்

புல்லுமலை குடிநீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

12 Jun, 2018 | 8:37 pm

Colombo (News 1st)  மட்டக்களப்பு – புல்லுமலையில் அமைக்கப்படும் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கவனயீர்ப்புப் ​போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு – கோட்டைமுனை இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இந்தப் பேரணி ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புக்கள் இணைந்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

கள ஆய்வுகள் எவற்றையும் மேற்கொள்ளாது, கொழும்பில் இருந்து வந்து மட்டக்களப்பிலுள்ள சில திணைக்கள அதிகாரிகளின் அனுமதியோடு குறித்த தொழிற்சாலை நீரை உறிஞ்சுவதாகவும் இது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

குறுகிய காலத்தில் இந்த தொழிற்சாலைக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதால், அரசியல் தலையீடு இருக்கும் என தாம் சந்தேகிப்பதாகவும் வறட்சி ஏற்படும் பகுதியில் இவ்வாறு நீரை உறிஞ்சி போத்தலில் அடைக்கும் திட்டத்திற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான பல்வேறு பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

பேரணி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததும், அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

குறித்த தொழிற்சாலைக்கு பிரதேச, மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் அனுமதி பெறப்படவில்லையென தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், குறித்த தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கிய அரச நிறுவனங்களிடம் விளக்கம் கோருவதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, புல்லுமலை குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை அங்கிருந்து அகற்றுமாறு கோரி, அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்