தேங்கிக்கிடக்கும் 2 இலட்சம் கடிதங்கள்

மத்திய தபால் பரிமாற்றகத்தில் தேங்கிக்கிடக்கும் 2 இலட்சம் கடிதங்கள்

by Bella Dalima 12-06-2018 | 3:42 PM
Colombo (News 1st) தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் மத்திய தபால் பரிமாற்றகத்தில் தேங்கிக்கிடப்பதாக தபால் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு காரணிகளை முன்வைத்து நேற்று (11) மாலை 4 மணி முதல் தபால் தொழிற்சங்க ஒன்றியத்தினர் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் ஊழியர்களும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் கலந்துகொண்டுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார். தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தபால் மா அதிபர் ரோஹன அபேரத்னவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. தபால் தொழிற்சங்க ஒன்றியத்தினரின் கோரிக்கைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் கூறினார். ஊழியர்களின் பகிஷ்கரிப்புக் காலத்தில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைத்துக்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை பிரதி தபால் மா அதிபர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தபால் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்