மண்ணெண்ணெயின் விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி

மண்ணெண்ணெயின் விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி

by Bella Dalima 12-06-2018 | 3:29 PM
Colombo (News 1st)  மண்ணெண்ணெயின் விலையை ​70 ரூபாவாகக் குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலையை 70 ரூபாவாகக் குறைப்பதற்கான பத்திரத்தை, நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று அமைச்சரவையில் சமர்ப்பித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டார். இதேவேளை, பஸ், லொறி, டிப்பர் உள்ளிட்ட வாகனங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடையாளங்காணப்படும் பட்சத்தில், அவற்றின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது காணப்படும் பயனாளிகளை தவிர்த்து மேலதிகமாக புதிய பயனாளிகள் இதனூடாக தெரிவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். அண்மைக்காலமாக நிலவிய அரசியல் பழிவாங்கல்களுக்கு அப்பால் இந்த அனுமதி கிடைத்துள்ளமை சிறந்த வரப்பிரசாதம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.