ஓய்வு பெற நிபந்தனைகள் விதிக்கும் சுரேன் ரத்வத்த

பதவிக்கால நிறைவிற்கு முன்னரே ஓய்வுபெற ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு நிபந்தனைகள் விதிக்கும் சுரேன் ரத்வத்த

by Bella Dalima 12-06-2018 | 10:45 PM
Colombo (News 1st)  மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் தேசிய விமான சேவைக்கு அவருடைய சகோதரர் ஒருவர் நியமிக்கப்பட்ட போது, 2015 ஆம் ஆண்டளவில் நிறுவனம் 16.3 பில்லியன் நட்டத்தை எதிர்நோக்கியது. 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக, பிரதமரின் நண்பர் அஜித் டயஸ் தலைவராக நியமிக்கப்பட்டதுடன் பிரதமரின் ஆலோசகரான சரித்த ர்தவத்தவின் சகோதரர் சுரேன் ரத்வத்த ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சகோதரத்துவ நிர்வாகத்தினூடாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் கடந்த வருடம் வரை 28.5 பில்லியன் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. பிரதம நிறைவேற்று அதிகாரியை நியமிக்க அப்போதைய பணிப்பாளர் சபை இணக்கம் தெரிவிக்காதிருந்ததுடன், நியமிக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னர் அலரி மாளிகையின் பிரதிநிதியாக அவர் நிரந்தர நியமனம் பெற்றார். பணிப்பாளர் சபையின் பெரும்பான்மையினரின் கோரிக்கையுடன் ரத்வத்தவை பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவின் போதே அவருடைய பதவி நிரந்தரமாக்கப்பட்டது. ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து பதவிக்காலத்துக்கு முன்னரே ஓய்வு பெறுவதற்கு சுரேன் ரத்வத்த பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். 6 மாதங்களுக்கான கொடுப்பனவை வரியுடன் செலுத்த வேண்டுமென்பது அதில் பிரதான நிபந்தனையாகும். ஒரு வருடத்திற்கு அவுஸ்திரேலியாவிற்கு சென்று வருவதற்கான செல்லுபடியாகும் விமான சீட்டைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட வசதிகளும் கோரப்பட்டுள்ளன. தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ள தேசிய விமான சேவைக்கு நியமிக்கப்பட்டு தற்போது சலுகைகளை எதிர்பார்க்கும் இந்த நிறைவேற்று அதிகாரி கோரும் பணம் எவ்வளவு?