ரஷ்யாவின் வோல்கோகிராட்டில் படகு விபத்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள ரஷ்யாவின் வோல்கோகிராட்டில் படகு விபத்து: 11 பேர் பலி

by Bella Dalima 12-06-2018 | 5:01 PM
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள ரஷ்யாவின் வோல்கோகிராட் நகரில் இன்று இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான வோல்கோகிராட் நகரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நகரில் உள்ள வோல்கா நதியில், திடீரென இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழுவினர் நதியில் உயிருக்கு போராடியபடி இருந்த 5 பேரை மீட்டுள்ளனர். அவர்களில் மூவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த வோல்கோகிராட் நகரில் இங்கிலாந்து, துனிஷியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, சவுதி அரேபியா, எகிப்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடக்க சுற்றுப்போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.