சேகரித்த பணப்பொதியை சி. தவராசாவின் வீட்டுக் கதவில் கட்டிய மாணவர்கள்

சேகரித்த பணப்பொதியை சி. தவராசாவின் வீட்டுக் கதவில் கட்டிய மாணவர்கள்

சேகரித்த பணப்பொதியை சி. தவராசாவின் வீட்டுக் கதவில் கட்டிய மாணவர்கள்

எழுத்தாளர் Bella Dalima

12 Jun, 2018 | 8:29 pm

Colombo (News 1st) வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசாவிற்கு மீள செலுத்துவதற்காக சேகரிக்கப்பட்ட சில்லறைக் காசுகள் அடங்கிய ”பாவப்பட்ட பணம்” என எழுதப்பட்ட பொதி இன்று அவரின் வீட்டுக்கதவில் கட்டப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வட மாகாண சபை கட்டடத் தொகுதிக்கு சென்றிருந்தனர்.

வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசாவிற்காக சேகரிக்கப்பட்ட பணத்தை ஒப்படைப்பதற்காகவே மாணவர்கள் அங்கு சென்றிருந்தனர்.

முழுவதும் சில்லறைக் காசுகளைக் கொண்ட அந்த பணப்பொதியில், ”பாவப்பட்ட பணம்” என எழுதப்பட்டிருந்தது.

மாகாண சபையின் இன்றைய அமர்விற்கு எதிர்க்கட்சித் தலைவர் சமூகமளிக்காத நிலையில், மாணவர்கள் முதலமைச்சரை சந்தித்தனர்.

மக்களிடம் தலா 1 ரூபா வீதம் சேகரிக்கப்பட்ட 7000 ரூபா பணத்தை அவர்கள் சி. தவராசாவிடம் கையளிக்க முடியாத நிலையில், முதலமைச்சரும் இந்த விடயத்தை அவருடன் நேரடியாகப் பேசி நடவடிக்கை எடுக்குமாறு கூறிவிட்டார்.

இதனால் மாணவர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் கொக்குவில் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்றனர்.

சி. தவராசாவை அங்கும் சந்திக்க முடியாமையால், அவருக்காக சேகரிக்கப்பட்ட பணம் அடங்கிய பொதியை, அவரின் வீட்டு வாசற்கதவில் கட்டிவிட்டுச் சென்றனர்.

இது தொடர்பில் வினவுவதற்காக வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவை தொடர்புகொள்ள நியூஸ்ஃபெஸ்ட் முயற்சித்தும், அவர் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக தம்மிடம் பெறப்பட்ட ஏழாயிரம் ரூபாவை மீள வழங்குமாறு வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அவையில் கோரியிருந்தார்.

இதனையடுத்து, வட மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் 7000 ரூபாவை, மீள வழங்குவதற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்தனர்.

ஒருவரிடமிருந்து ஒரு ரூபா வீதமாக பொதுமக்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் பணம் சேகரிக்கப்பட்டது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணத்தை வட மாகாண எதிர்க்கட்சித் தலைவரிடம் ஒப்படைப்பதற்கு உதவுமாறு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்