10 வருடங்களின் பின் இலங்கை அணி சந்தித்த தோல்வி

10 வருடங்களின் பின் இலங்கை அணி மே.இ.தீவுகளிடம் சந்தித்த தோல்வி

by Staff Writer 11-06-2018 | 10:17 PM

10 வருடங்களின் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 226 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. டிரின்டிடென் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 441 ஓட்டங்களைப் பெற்றதோடு பதிலளித்தாடிய இலங்கை அணி 185 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 229 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் 7 விக்கெட் இழப்புக்கு 237 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது. போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 453 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. 3 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களுடன் இலங்கை அணி நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. 94 ஓட்டங்களோடு களமிறங்கிய குசல் மென்டிஸ் டெஸ்ட் அரங்கில் தனது ஐந்தாவது சதத்தை எட்டினார். இலங்கை அணியின் கடைசி 5 விக்கெட்டுக்களும் 31 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட , இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 226 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்தியதீவுகள் இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 37 சர்வதேச இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி அதில் 11 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளதுடன் 26 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. கடந்த இரு வருடங்களில் 53 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 34 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதோடு , அதில் 14 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளது. இதே காலப்பகுதிக்குள் 25 டெஸ்ட் போட்டிகளை எதிர்க்கொண்டுள்ள இலங்கை அணி அதில் 10 போட்டிகளில் வெற்றியும் 11 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.