அரச அனுமதியின்றி நியிமிக்கப்பட்ட மிஹின் லங்கா பணிப்பாளர் சபை - தகவல் அம்பலம்

by Staff Writer 11-06-2018 | 5:29 PM

மிஹின் லங்கா தனியார் நிறுவனத்தின் முதலாவது பணிப்பாளர் சபை அரசாங்கத்தின் அனுமதியின்றி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவை, மிஹின்லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு இன்று நான்காவது நாளாக விசாரணைகளை முன்னெடுத்தது. மிஹின் லங்கா தனியார் நிறுவனத்தின் முதலாவது பணிப்பாளர் சபை நியமிக்கப்படுவதற்கு அரசாங்கம் எவ்வித எழுத்து மூல அனுமதியையும் வழங்கியிருக்கவில்லை என்பது இதன்போது தெரியவந்துள்ளது. ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகளுக்காக நிறுவன பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று அழைக்கப்பட்டிருந்தனர். ஆரம்ப பணிப்பாளர்களாக ஐவர் நியமிக்கப்பட வேண்டியிருந்த போதிலும் நால்வர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மிஹின் லங்கா நிறுவனத்தின் ஆரம்ப பணிப்பாளர் சபைக்கு அரசாங்கத்தின் எவ்வித அனுமதியும் இல்லையென்பது தௌிவாவதாக நிறுவனத்தின் பதிவாளர் நாயகம் சாட்சியளித்தார். மிஹின் லங்கா நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை தாமதமடைந்துள்ளதுடன் தாமதத்துக்காக செலுத்த வேண்டிய தண்டப் பணம் கூட அந்த நிறுவனத்தினால் அறவிடப்படவில்லையென்பது இதன்போது தெரியவந்தது. மிஹின் லங்கா நிறுவனத்தின் ஆரம்ப விண்ணப்பப் பத்திரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இணைப்புச் செயலாளராக செயற்பட்ட சஜின் வாஸ் குணவர்தன மூலமே தமது நிறுவனத்துக்கு கிடைத்ததாக முதலீட்டு சபையின் பணிப்பாளர் சாட்சி வழங்கும் போது தெரிவித்துள்ளார். ஆரம்ப சட்டமூலத்தில் இந்த நிறுவனம் எயார் ஶ்ரீலங்கா தனியார் நிறுவனம் என பெயரிடப்பட்டிருந்ததுடன் பின்னர் வழங்கப்பட்ட ஆவணங்களில் அது மிஹின்லங்கா என மாற்றப்பட்டுள்ளது. முதலீட்டு சபைக்கு 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி விண்ணப்பப்த்திரம் அனுப்பப்பட்டுள்ளதுடன் அதற்கு அடுத்த நாளில் அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக முதலீட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார். முதலீட்டு சபை மிஹின் லங்கா நிறுவனத்துடன் நிவாரண உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதுடன் 2012 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முழுமையாக வரி நீக்கப்படும் வரை அந்த சலுகையை அனுபவித்துள்ளனர். மிஹின் லங்கா நிறுவனத்துக்கு முதலீட்டு சபை வழங்கிய சலுகைகளுக்கு ஏற்ப தீர்வை வரியற்ற உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை பயன்படுத்தி மதுபானம் தங்காபரணங்கள் மற்றும் வாசனைத்திரவியங்களை தீர்வை வரியின்றி கொண்டுவந்துள்ளமை இன்றைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.