கரையோர மீன் வளம் அழிவடையும் அபாயம்

கரைவலையில் உழவு இயந்திரப் பயன்பாடு அதிகரிப்பு: கரையோர மீன் வளம் அழிவடையும் அபாயம்

by Bella Dalima 09-06-2018 | 7:51 PM
Colombo (News 1st) தொன்றுதொட்டு வரும் பாரம்பரிய மீன்பிடி முறைமை மீறப்படுவது இயற்கை சமநிலையிலும் தாக்கம் செலுத்தவல்லது. கரைவலை மரபு நுணுக்கம் மாற்றப்பட்டு தற்போது கரைவலை இழுப்பதற்கு சில பகுதிகளில் உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கரைவலையில் உழவு இயந்திரப் பயன்பாடு முல்லைத்தீவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் சிலர் தெரிவித்தனர். உழவு இயந்திரப் பயன்பாட்டால் கடல் வளம் அழிவடையும் நிலை ஏற்படும் என முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் ஜெயா சுட்டிக்காட்டினார். இதற்கான அனுமதி தென்னிலங்கை மீனவர்களுக்கே அதிகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது முல்லைத்தீவு மீனவர்களும் அந்த நடைமுறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளதாகவும் மீனவர் ஒருவர் குறிப்பிட்டார். உழவு இயந்திரப் பயன்பாட்டால் தமது தொழில்வாய்ப்பு அற்றுப்போயுள்ளதாக சிலர் விசனம் தெரிவித்தனர். எவ்வாறாயினும், கடற்றொழிலாளர்கள், நீரியல்வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரைவலையை இழுப்பதற்கான தொழிலாளர் பற்றாக்குறை காரணமாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியது. எவ்வாறாயினும், பரீட்சார்த்த அடிப்படையில் உழவு இயந்திரத்தில் விஞ்சைப்பூட்டி இழுப்பதற்கான அனுமதி பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நடைமுறை கண்காணிக்கப்படுவதில்லை எனவும் ஆபத்தானதெனவும் நாரா நிறுவன பணிப்பாளர் க.அருளானந்தன் குறிப்பிட்டார். உழவு இயந்திரங்கள் கடலுக்கடியில் இருக்கும் அனைத்து உயிரினங்களையும் கரைக்கு இழுத்து வருவதற்கான வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடல் வளம் இதனால் அழிவடையும் எனவும் எச்சரித்தார்.