புதுமையாக அன்பு செலுத்துகின்றனர்: விஜயமுனி சாடல்

மஹிந்தவும் கோட்டாவும் முஸ்லிம், தமிழ் மக்கள் மீது புதுமையான அன்பை வௌிப்படுத்துகின்றனர்: விஜித் விஜயமுனி சாடல்

by Bella Dalima 09-06-2018 | 6:40 PM
Colombo (News 1st)  தேசிய முஸ்லிம் ஒன்றியம் சார்பில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் (08) கலந்துகொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, சிலரது திட்டமிட்ட செயல்களால் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் காணப்பட்ட வெளிப்படைத்தன்மையை முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமற்போனதாக குறிப்பிட்டிருந்தார். மகிந்த ராஜபக்ஸ ஆட்சியின் கடைசி காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சக்திகளின் தூண்டுதலால் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் உக்கிரமடைந்திருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஸ கூறியிருந்தார். அவரின் இந்த கருத்திற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பதில் கருத்து வௌியிட்டார். தற்போது மஹிந்த ராஜபக்ஸவும் கோட்டாபய ராஜபக்ஸவும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் மீது புதுமையான அன்பை வௌிப்படுத்தி வருவதாக விஜித் விஜயமுனி சொய்சா கூறினார். அந்த அன்பு இல்லையென்றால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என அவர்களுக்குத் தெரியும் எனவும், அவர்களின் இந்த அன்பையும் பேருவளை கலவர சம்பவத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டார். தமது அரசாங்கத்தின் கீழ் தவறானதொரு சம்பவம் கண்டியில் இடம்பெற்றதை நினைவுகூர்ந்த விஜித் விஜயமுனி சொய்சா, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கு சமாதானத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். எவ்வாறாயினும், இனவாதத்தில் ஈடுபடுவோர் பயங்கரவாதத்தை நோக்கி பயணிப்பதே உண்மை என அவர் தெரிவித்தார்.