காஸா எல்லையில் பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு

காஸா எல்லையில் பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு: அவசரமாகக் கூடுகிறது ஐ.நா சபை

by Bella Dalima 09-06-2018 | 5:21 PM
இஸ்ரேல் எல்லையை அண்மித்துள்ள காஸா பகுதியில் பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்படுவது தொடர்பாக எதிர்வரும் 13 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடி விவாதிக்கவுள்ளது. 1967 ஆம் ஆண்டு வரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு 1980 ஆம் ஆண்டில் அந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளதால், மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கிக்கொள்ள முயன்று வருகின்றனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடி வரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 இலட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005 ஆம் ஆண்டு வரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கிக்கொண்டாலும், அங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக அண்மையில் அறிவித்தார். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீன மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் காஸா எல்லைப்பகுதியில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் படைகளின் துப்பாக்கிச்சூட்டில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 129 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கடந்த மே மாதத்தில் மட்டும் 61 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். நேற்று (08) நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், காஸா எல்லையில் போராடும் பாலஸ்தீன மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையை அவசரமாகக் கூட்ட வேண்டும் என அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு கோரிக்கை விடுத்தது. இதனையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது கூட்டம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு அவசரக்கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (13) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.