மவ்பிமயிடம் நட்டஈடு: வழக்கை மீளப்பெற்றார்  பாட்டலி

மவ்பிமயிடம் 1.5 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி பாட்டலி தாக்கல் செய்திருந்த வழக்கு மீளப்பெறப்பட்டது

by Staff Writer 07-06-2018 | 4:54 PM
Colombo (News 1st) மவ்பிம பத்திரிகையிடம் 1.5 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலத்தில் மவ்பிம பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு கட்டுரைகளால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பகிரங்கமாக தெரிவித்த கருத்துக்கள் காரணமாக மவ்பிம பத்திரிகைக்கும் பாதகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பத்திரிகை நிறுவனம் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. தமது தரப்பு இந்த வழக்கை முன்னோக்கி இட்டுச்செல்வதற்கு விரும்பவில்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.சி. ஜயரத்ன நீதிமன்றத்தில் அறிவித்தார். ஆகவே வழக்கை மீளப்பெறுவதற்கு அனுமதிக்குமாறு அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இந்த வேண்டுகோளுக்கு கொழும்பு - இலக்கம் 1 மாவட்ட நீதிபதி பமில ரத்நாயக்க அனுமதி வழங்கியுள்ளார். தமது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிர் மனுவையும் மீளப்பெறுவதாக மவ்பிம பத்திரிகை சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.