Colombo (News 1st)
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு W.M. மென்டிஸ் நிறுவனம் மூன்று சந்தர்ப்பங்களில் 3.2 மில்லியன் ரூபாவிற்கான காசோலைகளை வழங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜூன மகேந்திரனுக்கு மத்திய வங்கி வழங்கியிருந்த வரையறையின்றி செலவிடக்கூடிய கடனட்டையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட செலவீனங்களை ஈடு செய்வதற்காக இந்த பணம் பயன்படுத்தப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
அர்ஜூன மகேந்திரனின் பிரத்தியேக செயலாளராக அமிலா தஹநாயக்க ஊடாக இந்த காசோலைகள் மாற்றப்பட்டமையும் நீதிமன்றத்தில் இன்று தெரியவந்துள்ளது.
இதேவவேளை, இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் இரண்டு காசோலைகள் W.M. மென்டிஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி சர்ச்சைக்குரிய முறிகள் விநியோகம் இடம்பெற்ற தினத்தன்று இதில் ஒரு காசோலை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இராஜாங்க அமைச்சரின் தேர்தல் இணைப்பு செயலாளரிடம் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பணம் பெற்றமை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு காசோலையும் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் சந்தேகநபர்களான பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.