புதிய பிரதி சபாநாயகர்- ஐ.தே.கவின் ஆனந்த குமாரசிறி

சுதர்ஷனியை வென்றார் ஐ.தே.கவின் ஆனந்த குமாரசிறி - இலங்கையின் 29வது பிரதி சபாநாயகராக தெரிவு

by Staff Writer 05-06-2018 | 2:15 PM

இலங்கைப் பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைப் பாராளுமன்றத்தின் 29 ஆவது பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்றைய சபை நடவடிக்கைகள் ஆரம்பத்தில் திலங்க சுமதிபால பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி, பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியை முன்மொழிந்தது. அத்தோடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயின் பெயர் முன்மொழியப்பட்டதை அடுத்து இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு சபாநாயகர் தீர்மானித்தார். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் முடிவில் ஆனந்த குமாரசிறி, 44 மேலதிக வாக்குகளால் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறிக்கு ஆதரவாக 97 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயிற்கு சார்பாக 53 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டிருந்தன. இதன்போது ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டதாக சபாநாகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இரகிய வாக்கெடுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.