தபால் , நீர்வழங்கல் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

தபால் , நீர்வழங்கல் பணிப்பகிஷ்கரிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமை

by Staff Writer 05-06-2018 | 2:30 PM
நாட்டின் அனைத்து தபாலகங்களிலும் கடிதங்கள் விநியோக்கப்படாமல் பெரும்பாலான கடிதங்கள் தேங்கியுள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் எச்.கே காரியவசம் தெரிவித்தார்.

தபால் நிலையப் பொறுப்பதிகாரிகளின் சேவையை நிரந்தர சேவையாக உள்வாங்காமை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த பணிபகிஷ்கரிப்பு இன்று நள்ளிரவு வரை தொடர்ந்தும் இடம்பெறும் என எச்.கே காரியவசம் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த பணிபகிஷ்கரிப்பினால், தபால் விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மேல்மாகாண ஊழியர்கள் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைக்கு இதுவரை பதில் வழங்கப்படாததை கண்டிக்கும் வகையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார். சம்பளப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.