ஶ்ரீலங்கன் விமான சேவை குறித்த விசாரணை ஆரம்பம்

ஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை இன்று ஆரம்பம்

by Staff Writer 04-06-2018 | 11:05 AM
ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீ லங்கன் கேட்டரிங் சேவை ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்கழுவின் சாட்சி பதிவுகள் இன்று ஆரம்பிக்கப்படுள்ளன. முதல்கட்ட சாட்சி விசாரணைக்கு குறித்த நிறுவனங்களின் பதிவாளர் மற்றும் அதிகாரி ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்தார். இன்று காலை பத்து மணிக்கு சாட்சி பதிவுகள் ஆரம்பமாகின. ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் சேவை ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் பொதுமக்களிடமிருந்து 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார். கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்கான விசேட குழுக்கள் இரண்டு நியமிக்கப்பட்டுள்ளன. சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஷிட்டர் ஜனரல் , ஜனாதிபதி சட்டத்தரணி நீல் உனம்புவவின் தலைமையிலான சட்டக் குழுவொன்றும், விசேட பொலிஸ் விசாரணை குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களூடாக விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கை பெறப்படவுள்ளதாக ஆரியதாச குரே தெரிவித்தார். ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் சேவை ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபித்தார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அணில் குணரத்ன தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் எம்,டீ.ஏ. ஹெரல் மற்றும் இலங்கை கணக்கு மற்றும் தணிக்கை தரநிலைகள் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஜே.கே.கீகனகே ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஶ்ரீ லங்கன் எயார்லைன், வரையறுக்கப்பட்ட ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா நிறுவனம் ஆகியவற்றில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.