லிந்துலை - தலவாக்கலை நகரசபை தலைவர் விளக்கமறியலில்

லிந்துலை - தலவாக்கலை நகர சபையின் தலைவர் அசோக்க சேபால உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

by Staff Writer 04-06-2018 | 8:54 AM
லிந்துலை - தலவாக்கலை நகர சபையின் தலைவர் அசோக்க சேபால உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். லிந்துலை - தலவாக்கலை நகரசபையின் தலைவர் அசோக்க சேபால, நகர சபை உறுப்பினர் இஷார அநுருத்த மச்சநாயக்க மற்றும் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் அடங்களாக நான்கு பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். அக்கரபத்தனை போட்மோர் தோட்டத்தில் கடந்த வருடம், ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி, அந்தக் குழந்தையை விற்பனை செய்தமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மற்றும் குழந்தையை பணத்திற்கு வாங்கிய யுவதி ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இவர்கள் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் உடகப் பேச்சாளர் கூறினார். கடத்தப்பட்ட குழந்தை தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளது.