சுதந்திரக் கட்சிக்கு புதிய பொதுச் செயலாளர்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் தெரிவு

by Staff Writer 03-06-2018 | 12:30 PM

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பேராசிரியர் ​ரோஹன லக்‌ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை அப்பே கம வளாகத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரிகள் குழுவும் கலைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக தாம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக பேராசிரியர் ​ரோஹன லக்ஷமன் பியதாச நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார். இந்த பதவிக்காக தமது பெயரை ஜனாதிபதி முன்மொழிந்ததாகவும் அவர் கூறினார். தற்காலிக அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒற்றுமையாக முன்னோக்கி இட்டுச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இன்று முற்பகல் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் , அண்மையில் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 45 நாட்களுக்காக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.