சீரற்ற வானிலை-கினிகத்ஹேனவில் போக்குவரத்து பாதிப்பு

மலையகத்தின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை தொடர்கிறது

by Staff Writer 03-06-2018 | 2:04 PM

கினிகத்ஹேன - நோட்டன் பிரிஜ் பிரதான வீதியின் தியகல மல்லிகாவ பகுதியில் கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய வானிலையால் இன்று அதிகாலை 2 மணியளவில் கற்பாறை சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியூடாக முச்சக்கர வண்டி மாத்திரமே பயணிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹற்றன் - நுவரெலியா, ஹற்றன் - கொழும்பு, ஹற்றன் - பலாங்கொட பகுதிகளூடாக செல்லும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதேவேளை, இரத்தினபுரி நிவித்திகல தேல பிரதான வீதியில் அமைந்துள்ள பாலம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். நேற்று இரவு முதல் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியின் லிந்துலை பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், ஒருவழி போக்குவரத்து மாத்திரம் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். சீரற்ற வானிலையால் மரங்கள் முறிந்து வீழ்தல் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், அவதானத்துடன் செயற்படுமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.