இந்த வருடத்தில் இதுவரை 100 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையில் இந்த வருடத்தில் மாத்திரம் 100 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது

by Staff Writer 03-06-2018 | 8:33 PM

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு கடத்தப்டப்ட தங்கத்தின் அளவு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு கடத்தப்படவிருந்த தங்கம் இந்த வருடம் 37 சந்தர்ப்பங்களில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை சுங்க அதிகாரிகளால் 42 கிலோ 200 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.​ இலங்கை கடற்படையினர் இந்த வருடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்கத்துடன் 16 சந்தேகநபர்களை கைது செய்து சட்டநடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தலைமன்னார். யாழ்ப்பாணம். மன்னார், கல்பிட்டி ஆகிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 57 கிலோ 100 கிராம் தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கொமான்டர் தினேஷ் பண்டார குறிப்பிட்டார். நாட்டின் தேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சு கடந்த ஏப்ரல் மாதம் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத வரியை விதித்தது. வரி அதிகரிப்பிற்கு பின்னரும் சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தும் முயற்சிகள் அதிகரித்துச் செல்வதை கடற்படையினரின் தரவுகளும், சுங்க திணைக்களத்தின் தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன.