திட்டமிட்டவாறு பேச்சுவார்த்தை நடைபெறும்: ட்ரம்ப்  

வட கொரிய ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திட்டமிட்டவாறு நடைபெறும்: ட்ரம்ப் அறிவிப்பு

by Bella Dalima 02-06-2018 | 4:31 PM
வட கொரிய ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திட்டமிட்டவாறு சிங்கப்பூரில் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார். வட கொரியாவின் சிரேஷ்ட தூதுவரான கிம் யோங் கோலுடனாக பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. வட கொரிய சிரேஷ்ட தூதுவர், அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பேயோவையும் சந்தித்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் வௌ்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் வழங்கிய கடிதமொன்றை வட கொரிய தூதுவர் அமெரிக்க ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது கொரியப் போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொரியப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும், சமாதான முடிவு இதுவரை எட்டப்படவில்லை என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி, திட்டமிட்டவாறு இம்மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறியுள்ளார்.