பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் நிறுத்தம்

யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் முற்றாக நிறுத்தம்

by Bella Dalima 02-06-2018 | 9:04 PM
Colombo (News 1st)  நாட்டின் கல்வித்துறைக்கு திறமையான ஆசிரியர்களை உருவாக்கிய யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. பலாலி ஆசிரியர் கலாசாலை 1947 ஆம் ஆண்டு 54 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணியொன்றில் நிர்மாணிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் வருடாந்தம் 700 தொடக்கம் 800 வரையான மாணவர்கள் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் மலையக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, 1986 ஆம் ஆண்டு ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன. திருநெல்வேலி முத்து தம்பி ஆரம்ப பாடசாலையில் இயங்கி வந்த பலாலி ஆசிரியர் கலாசாலை சில பிரச்சினைகள் காரணமாக 2006 ஆம் ஆண்டு முதல் இயங்காமற்போனது. இந்நிலையில், 2012 ஆம் ஆண்டு பலாலி ஆசிரியர் கலாசாலையின் நிதி மற்றும் நிர்வாகம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், பலாலி ஆசிரியர் கலாசாலை மூடப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கல்வி நடவடிக்கைகளைத் தாம் பொறுப்பேற்கத் தயங்கியதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் வீரகத்தி கருணாலிங்கம் தெரிவித்தார். பலாலி ஆசிரியர் கலாசாலையின் பாடத்திட்டங்கள் கோப்பாய்க்கு மாற்றப்பட்டதாகவும் எல்லா பாட நெறிகளையும் கோப்பாயில் பயிற்றுவிப்பது மிகவும் கஷ்டமான காரியம் எனவும் பலாலி ஆசிரியர் கலாசாலை இயங்குவதையே தாம் மனப்பூர்வமாக விரும்புவதாகவும் அதிபர் வீரகத்தி கருணாலிங்கம் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையை விடுக்கும் நிலைப்பாட்டில் தாம் இல்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.