ஊனத்தைப் பார்க்காதே, ஊக்கத்தைப் பார்!

ஊனத்தைப் பார்க்காதே, ஊக்கத்தைப் பார்: கால் விரல்களால் இசை மீட்டும் சப்திகா

by Bella Dalima 02-06-2018 | 8:40 PM
Colombo (News 1st)  கால்கள் இரண்டையும் கைகளாக மாற்றி, மாற்றுத்திறனாளியெனும் சொல்லை அர்த்தப்படுத்தும் மாணவியொருவரின் திறமையை நியூஸ்ஃபெஸ்ட் பதிவு செய்துள்ளது.
உலகத்திலுள்ள ஊனத்தைப் பார்க்காதே ஊனத்திலுள்ள ஊக்கத்தை மட்டும் பார்!
இது மாற்றுத்திறனாளியான சத்தியசீலன் சப்திகா, தனது கால் விரல் இடுக்கில் எழுதுகோல் வைத்தெழுதிய வாசகம். 15 வயதான சப்திகா வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி பயின்று வருகின்றார். மூன்று பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாமவரான சப்திகாவின் தந்தை விடுதியொன்றில் தொழிலாளியாக பணியாற்றுகின்றார். இயலாமையை புறந்தள்ளி, இசைத்துறையில் விசேட தேவையுடையோருக்கான பிரிவில் இவர் தேசிய ரீதியில் விருது வென்றுள்ளார். கலைத்துறை மீதான ஆர்வத்தால் சப்திகாவின் கால் விரல்களும் இசை மீட்டுகின்றன. சித்திரமும் கைப்பழக்கம் எனும் கூற்றுக்கு சவால் விடுக்கும் சப்திகா, அதற்காகவும் பல சான்றிதழ்களை பெற்றிருக்கிறார். ஊனம் ஓர் குறையில்லை என நிரூபித்து வருகிறார் சப்திகா.