கிழக்கு ஆளுநரின் மனைவி மகளை கைதுசெய்யுமாறு உத்தரவு

ரோஹித போகொல்லாகமவின் மனைவியையும் மகளையும் கைது செய்யுமாறு உத்தரவு

by Bella Dalima 01-06-2018 | 3:29 PM
Colombo (News 1st)  கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி தீப்தி போகொல்லாகம மற்றும் அவரின் மகளான தில்ஹானி போகொல்லாகம ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெண்ணொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறித்த இருவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவியும் புதல்வியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், முதலாவது சந்தேகநபரான தீப்தி போகொல்லாகம, மனுதாரரான பெண்ணுக்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்ததாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று மன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையிலேயே இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்க இன்று கறுவாத்தோட்டம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.