கோட்டாபயவின் மனு மீதான விசாரணை: நான்காவது நீதிபதி விலகல்
by Bella Dalima 01-06-2018 | 7:39 PM
Colombo (News 1st)
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளில் இருந்து தாம் விலகுவதாக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ நேற்று (31) அறிவித்துள்ளார்.
குறித்த வழக்கில் இருந்து விலகியுள்ள நான்காவது நீதிபதி இவராவார்.
இதற்கிணங்க குறித்த மனுவை மற்றொரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்வதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டட குறித்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர மற்றும் சரத் ஆப்ரு ஆகியோர், அவர் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை ஏற்கனவே விதித்திருந்தனர்.
இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்ததன் பின்னர் உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர இந்த வழக்கில் இருந்து விலகினார்.
இதன் பின்னர் பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட நீதியரசர் குழாமில் இருந்த புவனேகு அளுவிகாரே மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கில் இருந்து விலகினர்.
அதற்கமைய, கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்த மனு தொடர்பான வழக்கில் இருந்து உயர் நீதிமன்றத்தின் 4 நீதியரசர்கள் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.