கொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்

கொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்: உக்ரைனில் பரபரப்பு

by Bella Dalima 31-05-2018 | 7:05 PM
ரஷ்ய ஊடகவியலாளரான ஆர்காடி பாப்செங்கோ (41) கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைனிலுள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் அவரது குடும்பத்தினரும் சக ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் படம் ஒன்றும் பத்திரிகைகளில் வெளியானது. ரஷ்ய பாதுகாப்புப்படையினர் ஆர்காடியைக் கொல்வதற்காக உக்ரைனைச் சேர்ந்த ஒருவருக்கு 40,000 டொலர்கள் கொடுத்திருந்தனர். அந்த மனிதர் அவரைக் கொல்ல இன்னொரு மனிதரை வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் யாரெனக் கண்டுபிடித்த உக்ரைன் பொலிசார் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், நண்பர்களும் உறவினர்களும் ஆர்காடியின் இறுதிச்சடங்கிற்காக ஆயத்தமானார்கள். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஆர்காடி தொலைக்காட்சியில் தோன்றினார். தான் இறந்ததாக செய்தி வந்தமைக்காக தனது மனைவியிடமும் சகாக்கள் உள்ளிட்ட அனைவரிடமும் ஆர்கேடி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அவரை தொலைக்காட்சியில் கண்டதும் அவரது நண்பர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்க, சில நண்பர்கள் கண்ணீர் வடித்தனர். தன்னை கொல்வதற்காக ரஷ்யா ஆட்களை ஏற்பாடு செய்திருப்பதை அறிந்ததும் அவர்களைக் கைது செய்வதற்காகவே பொலிசார் இவ்விதம் திட்டமிட்டதாகவும் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவரைக் கொலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நபர் கைது செய்யப்படும் வீடியோவும் வெளியாகியுள்ளது. சினிமாவில் வருவதுபோல் அரங்கேறிய இந்த சம்பவங்கள் உக்ரைனில் மட்டுமின்றி ரஷ்யாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.